
............................................................................
அன்பான குடும்பம் அதுவே எமக்குச் சொந்தம்...................................................
பூவின் வாழ்விது. காயாகிக் கனியாகித்தன்னை வளர்த்த மண்ணுக்கே எருவாகும். எனினும் தேவன் தீர்ப்புக்கே பிறழ்வானது, மனித நீதிக்கு முரணானது, உருவான பூ கருவாகுமுன் சிதையேறுது........ யார் செய்த சாபமோ?......... செடியே நீ சீராய் வாழ். நேராய் வாழ். நாளை நீ விட்டுச் செல்லும் சமூகத்துக்காக.
எமது கலாசார விழுமியங்கள் பேணப்பட்டு வருவதன் மூலம் அதாவது ஆரோக்கியமான குடும்ப வாழ்வைக் கட்டி எழுப்புவதன் மூலம் நாளை மலரும் சமூகத்தை நாம் மிக உன்னதமான ஆரோக்கியம் மிக்கவர்களாக சிருஷ்டிக்க முடியும். லௌகீக வாழ்வில் பேணப்படும் வரன்முறைகள் தவறும் பட்சத்தில் அதாவது, பெற்றோர்கள் நெறிதவறும்போது பிள்ளைகளின் வாழ்வு சீரழிகிறது. நெறிதவறும் ஈர்வை தற்காலத்தில் முழுவீச்சாக அதிகரித்துக் கொண்டு வருவதாக உள்ளது.
இவ்வாறான நெறி தவறிய உறவில் ஈடுபடுவதன் மூலம் தேடிக்கொள்ளும் திரவியமாக உள்ளவை..... பால்வினை நோய்களாகும்.... இவ்வாறான நெறிதவறிய உறவில் ஈடுபடுவதற்கு சில உளவியல் பின்னணிகளும், நோயியல் அறிவின்மையும் அத்துடன் சிலவரட்டு எண்ணங்களுமே காணரமாக அமைகின்றன.
நோய்த்தொற்றுள்ள ஒருவருடன் யோனிவழி, குதவழி, வாய்வழி போன்ற எவ்வழியில் பாலியல் தொடர்பு கொள்வதாலும் இந்நோய்கள் பரவிக்கொள்ள வாய்ப்பு உண்டு. குறிப்பாக ஆங்கில முத்தத்தால் கூட இந்நோய்கள் பரவுதற்கு சாத்தியக்கூறுகள் அதிகம் காணப்படுகிறது. எமது சமூகத்தில் அநேகர் மேற்குறிப்பிட்ட வழிகளில் சில வகையான செயற்பாடுகளால் மட்டுமே இந்நோய்கள் பரவமுடியும் என்ற எண்ணத்தைக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும் ஆணுறைகள் மீது மிகவும் நம்பிக்கை கொண்டிருப்பதும் அநேகரில் காணப்படக்கூடிய ஒன்றாகும். ஆணுறை என்பது அவ்வளவுக்கு பெரியளவில் உயர் பாதுகாப்பு என்று கூறும் அளவுக்கில்லை. நம்பகத்தன்மை குறைந்தது. இவை கிழிவடைவதன் மூலம் அல்லது தவறான பாவனையின் மூலம் அதாவது, சரியான முறையில் அணியத்தவறின் பாதகமான விளைவையே உண்டுபண்டும். பொதுவாக நெறிதவறிய உறவில் ஈடுபடும்போது மிகவும் மதுபோதையில் இருப்பதும், பதகளிப்புடன் இருப்பதும் அறியக்கூடியதாகவே உள்ளது. அவ்வேளையில் இவர்கள் சரியான முறையில் உறைகளைப் பயன்படுத்துவார்கள் என்பதுகூட கேள்விக்குரியதொரு விடயமாகவே காணப்படுகின்றது.
மற்றும், இந்நோய்களில் அநேகமானவை இலகுவில் கண்டறியமுடியாதவை. பலவிதமான சோதனைகளைச் செய்வதன் மூலமே இனங்காணமுடியும். மற்றும் எல்லாவிதமான பால்வினை நோய்களுக்கும் குணமாகும் மருந்துகள் அறியப்படவில்லை. அநேகர் நோய்வரின் குணப்படுத்தலாம் தானே என்ற எண்ணத்திலும் நோயின் பாரதூரமான விளைவுகள் பற்றி போதிய அறிவின்மையினாலும் தவறிழைக்க முற்படுகின்றனர். உரிய சிகிச்சை பெறுவதற்குத் தாமதிக்கும் போதுகூட இந்நோய்கள் காரணமான சிக்கல் நிலைமைகள் ஏற்படலாம். ஆண்-பெண் மலட்டுத்தன்மை மற்றும் இதயம், மூளை, நரம்பு போன்றவற்றிலும் மோசமான பாதிப்புக்கள் ஏற்படலாம்.
இந்நோய்களின் குணங்குறிகள் மீண்டும் மீண்டும் மறுதலிக்கலாம். சில நோய்க்குரிய கிருமிகள் கர்ப்பம்தரித்த தாய்க்குக் காணப்படின் அது எதுவுமே அறியாத சிசுவுக்கும் தொப்புள்கொடி உறவினால் கடத்தப்படலாம். அத்துடன் இந்நோய்க்கிருமிகள் பிரசவிக்கும் சிசுவுக்கும் பிரசவத்தின் போது இனப்பெருக்கச் சுவட்டிலிருந்து தொற்றிக்கொள்ளலாம்.
இங்கு, பெற்றவர்கள் பட்டகடன் பிள்ளைகளைச் சேர்கின்றது. ஒருவர் பாலியல் நோய்க்கு உட்படின் அவர்மட்டும் சிகிச்சை பெற்று எந்தப்பலனும் இல்லை. அவருடன் பாலியல் தொடர்பில் உள்ள யாவரும் தம்மைப் பரிசோதித்து சிகிச்சை பெறவேண்டும். அவ்வாறு செய்வதற்கு ஏற்ற மனநிலை எவரிடமும் இருப்பதில்லை.
அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளும் சூழ்நிலையும் ஏற்றதல்லாததாகிப் போகின்றது. (நாடோடி வாழ்க்கை) நெறிதவறிய உறவில் ஆபத்தான பாலியல் தொடர்புகள் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம்.
ஆபத்தான பாலியல் தொடர்புகளாக கருதக்கூடியவை
• பலருடன் பாலியல் தொடர்பு வைத்திருத்தல்
• தனது பாலியல் துணையை அடிக்கடி மாற்றிக் கொள்வதன் மூலம்
• அறிமுகமற்றோருடன் பாலியல் தொடர்பு கொள்ளல்
• பாலியல் தொழிலில் ஈடுபடல்
• பாலியல் தொழிலில் ஈடுபடுவோருடன் ..........என்பனவாகும்
காதல்தேடும் அப்பாவிப் பூக்கள் அனுபவம் மிக்க வண்டுகளின் பசிக்கு இரையாகி கருகி வீழ்கின்றன. மற்றும் இளவட்டங்கள் அப்பாவிப்பூ என்று நினைத்து அலைந்து திரிகின்ற முட்களில் மாட்டிக் கொள்கின்றன. முட்கள் தானே விரைவில் அவை குற்றிக்கொள்ளும் தானே. மேலும் சிலர் எதுவித அறிமுகமுமின்றி அழகான பறவைக்கு அறிமுகம் வேண்டுமா? என்ற எண்ணத்தில் மாட்டிக் கொள்கின்றனர். அறிமுகமில்லாதவர்களுக்கே இப்படி உயரிய பொருட்களை எல்லாம் தரும் பறவை, இப்படி எத்தனை அறிமுகமில்லாதவர்களைச் சந்தித்திருக்கும் என்ற எண்ணம் இவர்களுக்கு எழுமாயின் இவர்கள் பிழைத்துக்கொள்வர்.
பலருடன் தொடர்பு கொள்வதன் மூலமும் தனது பாலியல் துணையை அடிக்கடி மாற்றிக்கொள்வதன் மூலமும் வேறுபட்ட அனுபவங்களைப் பெறமுடியும் என்ற எண்ணம் சிலரிடம் காணப்படுகின்றது. இவை நோயத்தொற்றுக்கான வாய்ப்புக்கு மேலும் வலுச்சேர்க்கிறது. அன்றியும் கர்ப்பப்பை புற்றுநோய்க்கும் இவை வழிகோலுகின்றன.
நெறிபிறழ்வான பாலியல் உறவை ஏற்படுத்தக் காரணங்கள் யாவை எனப்பார்க்கும்போது
திருப்தியின்மை முக்கிய இடத்தை வகிக்கிறது. எனினும் நெறிதவறிய உறவின்போது ஏற்படும் குற்ற உணர்வு, பதகளிப்பு, அவசரம் போன்றவற்றாலும் இச்செயற்பாட்டில் ஈடுபடும் குறிப்பாகப் பெண்கள் கருதுமளவுக்கு திருப்தியடைவதாக இல்லை. திருட்டுமாங்கனி கனிகட்டு இனிக்காது போகிறது.
மற்றும் இருபாலாரும் தமது நேரத்தில் (ஒருநாளில்) மிகவும் சுறுசுறுப்பான நேரத்தை அலுவலகங்களிலேயே செலவிடுவதால் சக ஊழியருடன் செலவிடுவதால் பரஸ்பரமாக கருத்துப்பகிர்வுகளை ஏற்படுத்த முடிவதாலும் இதனூடாக ஏற்படும் உணர்வு ரீதியான பிரிவுகள் கால ஓட்டத்தில் பெரும் உணர்வு அலைகளாக மாறி தகாத உறவுகளுக்கு வழிவகுக்கின்றது. அத்துடன் அதிகார தோரணையிலும் முறைதவற வழிவகுக்கும். முதலைகளும் நம் சமூகத்தில் இல்லாது போகவில்லை. இதைவிட கணவன் நெறிதவறிய உறவைக் கொண்டிருப்பின் அவரைப்பழிவாங்கும் விதமாக மனைவியும் அவ்வாறான தொடர்புகளை கொண்டிருக்கும் தன்மையாலும் (பழிவாங்குவதாகக் கருதி) தாமாகவே மாட்டிக் கொள்கின்றனர் பேராபத்தில்.
தனிமை போன்ற விடயங்களும் மேலும் காரணங்களாக அமைகின்றன. இவற்றையெல்லாம் தாண்டி அண்மைக்காலங்களில் பெண்கள் நெறிதவறிய உறவில் காட்டும் ஈர்வை அதிகரித்துள்ளதுடன், பெண்கள் துணிச்சலாகச் செயற்பட ஆரம்பித்திருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. இதன் தோற்றுவாயாக தொலைக்காட்சி நாடகத்தொடர்களும் இணையமும் அமையலாம்.
இந்தத் தூண்டுதல்களால் நோய்த்தொற்று ஏற்படவே சந்தர்ப்பம் உண்டு. இதன் போதான அறிகுறிகள் யாவை எனப்பார்க்கும்போது பாலுறுப்புக்களில் கொப்புளங்கள், புண்கள் தோன்றுதல், சிறுநீர் அழற்சி இலிங்க உறுப்புக்களினூடாக பாயம் அதிகளவில் வெளியேறல் (சீழ், வெண்ணிறமான பாயம்) பெண்களின் அடிவயிற்றில் வலி ஏற்படும். மேற்படி அறிகுறிகள் தென்படும்போது,
• தாமதிக்காது வைத்திய ஆலோசனை பெறுங்கள்
• நோய் அறிகுறிகள் வெளித்தெரியாவிடினும் குறித்த சிலகாலம் வரை வைத்திய ஆலோசனைப்படி சிகிச்சையில் இருத்தல் வேண்டும் (நோய்த்தொற்று இனம் காணப்பட்டவர்)
• பாலியல் துணையில் ஈடுபடுபவர்கட்கும் பிணி ஆய்வுச் சோதனையை மேற்கொள்ள வேண்டும்
• தவறாது உரிய சோதனைகளை மேற்கொள்ளுங்கள்
• நோய் பூரணமாக குணமாகியுள்ளதா என உறுதி செய்யுங்கள்
இதைவிட இவற்றில் இருந்து முற்றாக விடுதலை பெற ஒரே ஒரு வழி பிறதுணை நாடாமை. குறிப்பாக ஒருவன்-ஒருத்தி என்பதேயாகும். சுருக்கமாகக் கூறின் பாலுறவின் தன்மையில் எந்தக் கட்டுப்பாடும் யாருமே விதிக்கவில்லை. எனினும் பாலுறவு கொள்பவர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட வேண்டும். அன்பான குடும்பம் அதுவே எமக்குச் சொந்தம்.
.....................................................................................................

வாலிப வயதில் எல்லோர்க்கும்: கண்ணிமைகள் சாமரம் வீசும் காற்றில் கற்பனைகள் சிறகடிக்கும், எண்ணங்கள் பறந்து பறந்து கானம் வாசிக்க வானம் தேடும். பூமியைப் பூப்பந்தாட தத்தித்தாவிடும் மனம்: இமயம் சென்று இறுகக் கண்மூடி உறங்க நினைக்கும். உல்லாசம் தேடி உலகெல்லாம் சிந்தனைச் சிதறல்கள் சிதறிப் பறக்கும்.
உல்லாசம் எல்லையை மீறித் தொல்லைகளை உள்வாங்கும்.
உல்லாசத்தை அதிகம் விரும்புபவர்கள் அதன் ஆளுகைக்கு உட்பட்டு, அவர்களின் ஆளுமைத் திறனில் பெரிதும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பை ஏற்படுத்துகின்றார்கள். இந்த மாற்றங்கள் பொதுவாக சமுதாய நலனையும், சமூகத்தின் உட்கட்டுமானத்தையும் சிதைத்து விடுகிறது. அதுமட்டுமல்லாமல் அவர்களின் உலகியல் வாழ்விலும் பற்றற்ற நிலையை ஏற்படுத்தி விடுகிறது. இவர்களில் இளைஞர்கள் மட்டுமல்ல, யுவதிகளும் உட்படுகின்றார்கள்.
இவர்கள் கீழ் காணும் இயல்புகளைக் கொண்டிருப்பர்:
• நிரந்தரமான நட்புப்புற நிலையில் இருந்து தவறுதல்
• மற்றவர்களின் உணர்வுகளை உணர முடியாத நிலை
• திறனாய்வின்றிய செயற்பாடுகள்
• விரக்தியை சகிக்க முடியாமை
• வன்முறைகளின் மீதான ஈர்வை
• குற்ற உணர்வின்மை
• அனுபவத்திலிருந்து கற்குமாற்றலின்மை
• உணர்வுகள் உறைந்த நிலை
• ஆக ஆராய்வுத்தன்மை
• உல்லாசம் தேடல்
• பற்றற்ற நிலை
• ஆரோக்கியமின்றி இலகுவில் கூட்டுச் சேரும் இயல்பு என்பன ஏற்படும்
பொதுவாக இவர்களில் அநேகர் எவரிடமும் அதிகமாக ஆழமான நட்பை அல்லது விசுவாசத்தைத் கொண்டிருப்பது அரிது. நண்பர்களை அடிக்கடி மாற்றிக்கொள்வதம், எந்தவித இலக்குமில்லாது அல்லது குறுகிய நோக்கில் கூட்டம் சேரும் தன்மையையும் கொண்டிருப்பர். தங்களது எண்ணங்கள் நிறைவேற வேண்டும் என்பதற்காக எவருடனும் நட்புக்கொள்வதாகவும், மற்றவர்களின் எண்ணங்களைப் புரிந்துகொள்ள முடியாமையும் ஏற்படுகிறது.
மற்றும் இவர்கள் எதையும் சிந்தித்து முடிவெடுக்க முடியாமலும், விரக்திகள் ஏற்படும் போது அவற்றிலிருந்து மீள முடியாது, மேலும் மேலும் படுகுழியில் வீழ்வதாக மதுவை நாடுவதாகவும் அமையும். அத்துடன், வன்முறைகளுக்கு மது வடிகாலமைப்பதாகவும் காணப்படுகிறது. இப்படியான ஒரு விசவட்டம் தொடர ஏதுவாகவும் அமைகிறது.
பொதுவாக ஒரு தவறை மறைக்க அல்லது அதிலிருந்து மீள மேலும் மேலும் தவறுகளைச் செய்து திருப்தி காண்பதால் குற்ற உணர்வுகள் சிறிதும் அற்றதான மனநிலை ஏற்படுகிறது.
இவை மட்டுமல்லாது அனுபவங்களில் இருந்து எதனையும் கற்க முடியாது போவதுடன் உணர்வுகள் உறைந்து போகின்றன.
பொதுவாக உல்லாசத்தை மிக அதிகமாக நேசிக்கும் பெண்கள் தங்கள் மீது அதிக கவனம் செலுத்துவதாகவும், தங்களைப் பற்றி அதிகமாக மனதுள் ஆராய்வதாகவும் இருப்பதால் தமது உறவுகளைப் பற்றி எதையும் புரிய முடியாது போகின்றனர்.
மேலும் இவ்வாறான அதிகமான உல்லாசத்தை விரும்புபவர்கள் எவருடனும் ஆழமான நட்பையோ, காதலையோ அல்லது விசுவாசத்தையோ வைக்கமாட்டார்கள். அத்துடன் இவர்களால் முடியாத காரியமும் அதுவாகத்தான் இருக்கும்.
இவர்களது லௌகீக வாழ்வு அர்ப்பணிப்புகளுடன் செயற்படமுடியாது விரிசலைத்தான் அதிகம் கொண்டிருக்கும்.

ரம்மியமான இளமைப் பருவம் அது: வண்ணாத்துப்பூச்சியின் சிறகின் கீழ்வாரமெல்லாம் வசித்திடக் கேட்கும். மெல்லிய காற்றின் சங்கீதம் காதுக்குள் மெல்லிசையாய் ஒலித்திடக் கேட்கும், இதயச் சிறகை உரக்க விரித்து காதல் வானில் இதமாய்ப் பறக்கக் கேட்கும்: சிறகசைத்து காற்றில்... பூமலரும். பூ மலர... வண்டின் வருகை கண்டு பூ மெல்ல நகும். வண்டு தேனை உண்டு பூவை விட்டு மெல்ல நகரும். வாடிய பூ - சமூகத்தின் கரடுமுரடான தரையில் பட்டு கண்ணாடிப் பூவாய் சில்லென்று சிதறிப் போகும்.
பொதுவாக யௌவனப் பருவமானது – 13-19 வயதுக்குட்பட்டது. இதனை ஆங்கிலத்தில் TEENAGE என்று அழைப்பர். இந்தப் பருவத்தில் பெரிதும் உளரீதியான, உடல்ரீதியான முதிர்ச்சியைப் பெண்கள் கொண்டிருப்பதில்லை. இதனால் இந்தப் பருவத்தில் இவர்கள் தாயாகும்போது அதிகமான அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
அனேகமாக இவர்கள் தாயாவதுகூட ஒரு திட்டமிட்ட செயற்பாடாக அமையாது. தவறுதலான செயலாகவே அமைந்து விடுகிறது. அத்துடன், இவர்கள் தங்கி வாழ்பவர்களாகவும், போதிய உளவலிமை அற்றவர்களாகவும், கல்வியைத் தொடர்பவர்களாகவும் மற்றும் சமூகத்தின் கூர்மையான பார்வைக்குள் தவறாது சிக்கிச் கொள்பவர்களாகவும் அமைகின்றனர். இவர்கள் உடல்ரீதியாகப் பெரிதும் முதிர்ச்சியடைந்திருப்பதில்லை.
இவர்களின் கருப்பை வளர்ச்சி, இடுப்பு என்பின் தன்மை என்பனவும் கர்ப்பத்தைக் காக்கும் தகவு அற்றதாகவும், பிரசவத்துக்கு ஏற்புடையதல்லதாகவும் காணப்படுகிறது.
இதனால் இவர்களுக்குப் பொதுவாக மருத்துவ கருவிகளைப் பயன்படுத்தியே பிரசவிக்க வேண்டிய தேவைப்பாடு ஏற்படுகிறது. இதனால் தாய்க்கும் சேய்க்கும் பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம்.
அத்துடன், இவர்கள் பிரசவத்துக்கு ஒத்துழைக்கும் தன்மையும் மிகக்குறைவாகவேயுள்ளது.
இவை மட்டுமல்லாது இவர்களின் மனநிலை – ஒத்துழைப்பின்றிய தன்மைகளினாலும், போசாக்குக் குறைபாடுகள் காணப்படுவதாலும், (வேண்டாத கர்ப்பம், கர்ப்பம் பற்றிய போதிய அறிவின்மை) இவர்கள் ஆரோக்கியமான குழந்தைகளைப் பிரசவிக்கத் தவறுகின்றார்கள். அத்துடன், கர்ப்பவதிகள் (கிளினிக்) பிணி ஆய்நிலையத்துக்குக் கிரமமாகச் செல்லாது விடுவதாலும், அங்கு வழங்கப்படும் போசாக்கு மாத்திரைகளை உட்கொள்ளாது விடுவதாலும், வைத்திய ஆலோசனையை செவிமடுக்கவும் தவறுவதால் இவர்களின் குழந்தைகளின் நலம் பாதிப்படைய சாத்தியக்கூறுகள் மேலும் அதிகமாக உள்ளன.
இந்தச் செயற்பாடுகளால் குறை பிரசவங்களுக்கும், காலம் தவறிய பிரசவங்களுக்கும் சந்தர்ப்பங்கள் அதிகரிக்கின்றன. தவிர, இவர்கள் தாயாகும்போது மேலும் சில சிக்கல்கள் ஏற்பட சந்தர்ப்பம் அதிகமாக உள்ளது. அதாவது குருதிசார் உபாதைகள் (PPH,PIH) சிறுநீர்த்தொற்று, அமையம் தவறிய கருத்தங்கல் ((Ectoopic Pregnancy )இ அதிபரவாந்தி (Hyperemisis Gravidarum) என்பவனவாகும்.
அத்துடன், இவர்கள் கருப்பை புற்றுநோய்க்கு ஆளாகவும் சாத்தியக்கூறுகள் உள்ளன. மற்றும் யௌவனப் பருவத்தில் கர்ப்பம் தரித்தல் ஏற்புடையதல்லாத ஒரு விடயம் என்றே கூறவேண்டியுள்ளது. இவை தவிர, யௌவனப் பருவ கர்ப்பம் தரித்தல் - தவிர்க்கும் முறைகளாலும், குற்றவியல் கருச்சிதைவுகளாலும் (Criminal Abortion ) – தாய் மரணம் போன்ற பாரதூரமான விளைவுகளுக்கு இட்டுச் செல்லும்.